Showing posts with label Cowboy western. Show all posts
Showing posts with label Cowboy western. Show all posts

Sunday, 15 April 2012

மின்னல் வீரன்

ரொம்ப நாளாக காமிக்ஸ் கதைகளை அமைதியாக படித்துக்கொண்டு வருகிறேன். கிட்டத்தட்ட பத்து பதினைந்து  வருடங்கள்.ஆனாலும் இதுவரையில் ஒரே ஒரு வாசகர் கடிதமோ, அல்லது ஆன்லைனில் பின்னூட்டமோ இட்டது கிடையாது.

இந்த ஆண்டை தமிழ் காமிக்ஸ் மற்றும் தென்னக காமிக்ஸ் வரலாற்றில் ஒரு watershed year என்றே சொல்லவேண்டும். இங்கே பெங்களூரிலும் காமிக்ஸ் கதைகள், பழைய pulp fiction குறித்து ஒரு ஆர்வம் தோன்றியுள்ளது (இன்றைய டெக்கன் குரோனிக்கல் பேப்பரிலும் மெஜஸ்டிக் புத்தக கடையை பற்றி ஒரு கட்டுரையே வந்துள்ளது).

எனக்கும் காமிக்ஸ் கதைகளை படிக்கும்போதெல்லாம் ஒருமுறையேனும் காமிக்ஸ் எடிட்டராக அவரது பணியை ஒருநாளாவது செய்ய ஆசை. ஆனால் இதுவரை நடக்கவில்லை (இனிமேலும் நடக்குமா என்றால், நடக்காது/தெரியாது).

அப்படி காமிக்ஸ் புத்தக எடிட்டராக ஆசைப்பட்டதின் விளைவே இந்த வலைப்பூ. இங்கே காபிரைட் உரிமை இழந்த கதைகளை நான் தமிழாக்கம் செய்ய உத்தேசித்துள்ளேன். சில வேளைகளில் அவை இன்னமும் காபிரைட் பெற்று இருப்பதாக தெரியப்படுத்தினால் அவற்றை எடுத்து விடுவேன். ஆகையால், காமிக்ஸ் எடிட்டராகும் என் கனவு இந்த வலைப்பூ மூலம் இன்று நிறைவேறுகிறது.

முதல் கதையாக மின்னல் வீரன் என்கிற கதை. அதென்னமோ தெரியவில்லை, கவ் பாய் கதைகள் எனக்கு சிறு வயது முதலே கொள்ளைப்பிரியம். ராணி காமிக்ஸ் இதழ்களில் படித்த பல கதைகளை இப்போதும் என்னால் மிகவும் தெளிவாக நினைவு கூற இயலும். நான் படித்த முதல் ராணி காமிக்ஸ் நாலாவது பலி. அதன் பின்னர் அனைத்து கதைகளையும் படிக்க ஆரம்பித்து விட்டேன். அப்படி ரசித்த ஒரு கதைதான் மின்னல் வீரன். ஆனால் அந்த கதையை என்னால் தேடிப்பிடிக்க முடியவில்லை. அதனால் இந்த மின்னல் வீரன் கதை முதல் போஸ்ட் ஆக இங்கே ஆரம்பமாகிறது.

முன் குறிப்பு: இங்கே ஸ்கான் செய்து பக்கங்களை நிரப்ப என்னால் இயலாது. ஆகையால் ஸ்கான் பக்கங்களை எதிர்பார்த்து இங்கே வராதீர்கள். இங்கே உள்ளவை நான் ஸ்கான் செய்தவை அல்ல.

01

02

03

04

இந்த கதையின் அந்த கடைசி வரிகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. ஆகையால் இந்த கதையை என் வலைப்பூவின் முதல் கதையாக தேர்ந்தெடுத்தேன். இதைப்போன்ற வித்தியாசமான ட்விஸ்ட் கொண்ட கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

இந்த கதையை எழுதியவர் (stan lee), இதற்கான ஓவியங்களை வரைந்தவர் (al williamson) பற்றி ஆன்லைனில் தேடினால் நிறைய தகவல் கிடைக்கும். அதையெல்லாம் சொல்லி உங்களை நான் போரடிக்க போவதில்லை. ஒரு கதையை ரசிக்க, கதையும் சித்திரங்களுமே போதும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

அடுத்த கதையாக நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயம் ஆன கருப்பு கிழவி கதையா அல்லது அறிமுகமான வேறொரு கவ் பாய் கதையா என்பதை இன்னமும் தேர்ந்தெடுக்கவில்லை. (யாராவது) இந்த வலைப்பூவை மேய்ந்தால், அவர்கள் தெரிவிக்கலாம். அடுத்த ஞாயிறு அன்று அடுத்த கதை.

Adios amigos.